​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா முறைகேடு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ சம்மன்

Published : Oct 11, 2018 8:05 AM

குட்கா முறைகேடு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ சம்மன்

Oct 11, 2018 8:05 AM

குட்கா முறைகேடு வழக்கில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக, குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் இருவர், உணவுப்பாதுகாப்பு மற்றும் கலால் அதிகாரிகள் என இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரகசியமாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயக்குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்கா முறைகேடு நடந்த காலகட்டத்தில் சென்னை மத்தியக்குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்தவர் ஜெயக்குமார். 2013ஆம் ஆண்டு தமிழகத்தில் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்ட பின்னரும், தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கி வந்த மாதவராவின் குட்கா ஆலையில்  2014ஆம் ஆண்டு ஜெயக்குமார் தலைமையிலான குழு சோதனை மேற்கொண்டது.

ஆனால் அதன்பிறகு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை ஏன் கைவிடப்பட்டது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.  இதுதொடர்பாக பேசிய சென்னை காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ், குட்கா முறைகேடு நடந்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டார். மேலும் இதற்கெல்லாம் காரணம் ஜெயக்குமார் தான் என்றும் ஜார்ஜ் குற்றஞ்சாட்டினார். இதற்கான ஆதாரத்தை சிபிஐ அதிகாரிகளிடம் ஜார்ஜ் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் எஸ்.பி. ஜெயக்குமார் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்படுவது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் வழக்கின் அடுத்தகட்ட நகர்வும் ஜெயக்குமாரிடம் நடைபெறும் விசாரணையின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.