​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Published : Oct 08, 2018 4:45 PM

அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Oct 08, 2018 4:45 PM

அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகியோருக்குப் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்கோமில் உள்ள ராயல் சுவீடிஷ் அகாடமி மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில்லியம் நார்தாஸ், நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் பால் ரோமர் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை பொருளாதாரம் தொடர்பான ஆய்வுக்காக பரவலாக அறியப்பட்டவர் வில்லியம் நார்தாஸ். கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வரி விதிப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பல்வேறு பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து இவரது ஆய்வு தொடர்பான அறிக்கையை ஐ.நா.குழுவினர் வெளியிட்டுள்ள நாளிலேயே, நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பருவ நிலை மாற்ற பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஐ.நா. வலியுறுத்தி இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சிக்கான நுட்பங்களை கண்டறிந்து விளக்கியதற்காக பேராசிரியர் ரோமருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் புரட்சி மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு இவரது ஆய்வு ஊக்கமளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசு அறிவித்த பின் பேசிய ரோமர், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு அதிக செலவாகும், கடினமான காரியம் என்று கருதி மக்கள் புறக்கணிப்பதே தற்போதுள்ள பிரச்சனை என்றார்.

பருவநிலைமாற்றம் போன்ற பெரிய சிக்கலை தீர்ப்பதற்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று ராயல் சுவீடிஷ் அகாடமி பொது செயலாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசுக்கு தேர்வு செய்தவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது.