​​ வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டார்: திமுக பொருளாளர் துரைமுருகன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டார்: திமுக பொருளாளர் துரைமுருகன்

Published : Oct 07, 2018 11:46 AM

வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டார்: திமுக பொருளாளர் துரைமுருகன்

Oct 07, 2018 11:46 AM

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு வெளிமாநிலத்தவரை நியமித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அப்போதே தமிழகத்தில் துணை வேந்தர் பதவிகளுக்கு பணம் கைமாறியது குறித்து கூறாதது ஏன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு முகாமை துரைமுருகன் பார்வையிட்டார். வாக்காளர் பெயர் திருத்தம் மற்றும் நீக்கம் குறித்து திமுகவினர் கொடுத்த பட்டியல்கள் மீதான நடவடிக்கைகளை கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் தொடர்ந்து இருப்பதாக கூறிய அவர், இதற்கு சோம்பேறி அதிகாரிகளே காரணமாக இருக்கலாம் என்று விமர்சித்தார்.

அல்லது இறந்தவர்களின் பெயரால் ஓட்டு விழுவதற்கு யாரோ பின்புலமாக இருக்கலாம் என்பதே அர்த்தம் என்று கூறிய துரைமுருகன், வராத மழைக்கு ரெட் அலர்ட் கொடுத்து, இடைத்தேர்தலை தள்ளிவைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு பிற மாநிலத்தவரை துணை வேந்தராக நியமித்தபோது, அதற்கு எதிர்ப்பு எழுந்தது என்று துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.

அப்போதே, முந்தைய காலத்தில் துணை வேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டதாக ஆளுநர் கூறாதது ஏன் என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதனால், எங்கேயோ விடிவதற்கு முன் சேவல் கூவுவது போல, நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன் ஆளுநர் கூறியிருப்பதில் ஏதோ சூட்சமம் இருப்பதாக துரைமுருகன் சந்தேகம் தெரிவித்தார்.