​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்தியப் பிரதேச ஆய்வகத்தில் ஆபத்தான ஃபென்டனைல் வேதிப்பொருள் பறிமுதல்

Published : Sep 30, 2018 12:31 PM

மத்தியப் பிரதேச ஆய்வகத்தில் ஆபத்தான ஃபென்டனைல் வேதிப்பொருள் பறிமுதல்

Sep 30, 2018 12:31 PM

மத்தியப்பிரதேச ஆய்வகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வேதிப்பொருள், ரசாயனப் போரில் கொத்துக் கொத்தாக உயிர்களைக் கொல்லக் கூடிய அளவுக்கு ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அமெரிக்க வெறுப்பு சிந்தனை கொண்ட பி ஹெச் டி பயிலும் நபரின் ரகசிய ஆய்வகத்தில் கொடிய வேதிப்பொருள் இருப்பதாக வந்த தகவலின் பேரில் வருவாய் புலனாய்வுத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சர்வதேச சந்தையில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ எடையுள்ள சிந்தடிக் ஓபியாய்ட், ஃபென்டனைல் ((synthetic opioid, fentanyl)) பறிமுதல் செய்யப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவியலாளர்கள் உதவியுடன் அந்த வேதிப்பொருளின் ஆபத்து உறுதி செய்யப்படுகிறது.

அதன்படி, ஒருவரின் உயிரைப் பறிக்க 2 மில்லிகிராம் ஃபென்டனைல் மட்டுமே போதும் எனும் வகையில், பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ ஃபென்டனைல் மனிதர்களின் தோல் மற்றும் சுவாசத்தில் ஊடுருவி ஒரே நேரத்தில் 50 லட்சம் பேரைக் கொல்லக் கூடியது என அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. நாட்டிலேயே முதன் முறையாக இதுபோன்ற கொடிய வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருடன் மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதீத திறமை கொண்ட வேதியியல் நிபுணர் மட்டுமே இதைத் தயாரிக்க முடியும் என அறிவியலாளர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்தியாவில் ஃபென்டனைல் தயாரிப்பு மூலப்பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை கண்காணிக்கப்படுகிறது.

அபாச்சி, சைனா கேர்ள், சைனா டவுன் என்ற மறைமுகப் பெயரில் விற்கப்பட்ட ஃபென்டனைல், ஹெராயினை விட 100 மடங்கு போதை தரும். இதை அளவை மீறி போதைக்காக உட்கொண்டதில் அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு மட்டும் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவைச் சேர்ந்த ஃபென்டனைல் தயாரிக்கும் மருந்து நிறுவனம், சீனாவில் வைத்து அதனை உற்பத்தி செய்து வந்தது. அங்கு களையெடுக்கும் பணிகள் தொடங்கியதை அடுத்து அந்நிறுவனம் இந்தியாவை ஆபத்தான ஃபென்டனைல் தயாரிக்கும் களமாக மாற்றியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.