​​ பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு

Sep 24, 2018 1:45 PM

கடலூர் அதிமுக எம்.பி. புகாரின் பேரில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இந்து ஆலயங்கள் மீட்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, திட்டக்குடி கோயில் நிலத்தை, அருண்மொழித்தேவன் ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், அருண்மொழித் தேவனை ஹெச்.ராஜா ஒருமையில் பேசியதாகவும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, கடந்த 19ஆம் தேதி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், ஹெச்.ராஜா மீது கடலூர் அதிமுக எம்.பி. அருண்மொழித் தேவன் புகார் அளித்தார். இதன்பேரில், ஹெச்.ராஜா மீது இருதரப்பினர் இடையே மோதலை உருவாக்குதல், சாதி-இன-மத கலவரத்தைத் தூண்டுதல், பொதுமக்களிடம் தவறான கருத்தை பரப்பி, விரோதத்தைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே, நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இழிவாக பேசியதாக 8 இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதிமுக எம்.பி. புகாரின் பேரிலும் தற்போது ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அருண் மொழித்தேவன் புகாரின் பேரில், ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து சைபர் க்ரைம் போலீசாரும், ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.