​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Rafale குறித்த AK அந்தோணியின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Published : Sep 18, 2018 5:08 PM

Rafale குறித்த AK அந்தோணியின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Sep 18, 2018 5:08 PM

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசப்பட்டதைவிட மலிவு என்றால், ஏன் 126 ரஃபேல் விமானங்களை வாங்கவில்லை என மத்திய அரசுக்கு ஏ.கே.அந்தோணி கேள்வி எழுப்பியுள்ளார். தங்களது ஒப்பந்தம் சிறந்தது என நம்பும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அது நிறைவேறாதது ஏன் என நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை மத்திய பாஜக அரசு மறைப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என்றும் அவர் வினவினார். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி தலையீட்டின் காரணமாகவே ஒப்பந்தத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டு விட்டதாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார்.

அதுமுற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என ஏ.கே.அந்தோணி இன்று மறுத்தார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசப்பட்டதைவிட 9 சதவீதம் விலை மலிவு என சட்ட அமைச்சரும், 20 சதவீதம் மலிவு என நிதியமைச்சரும், 40 சதவீதம் மலிவு என விமானப் படை அதிகாரியும் கூறுவதாக ஏ.கே.அந்தோணி கூறினார். அவ்வளவு விலை மலிவு என்றால், 36 விமானங்களுக்குப் பதிலாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசப்பட்டதைப் போல 126 விமானங்களாக ஏன் மத்திய பாஜக அரசு வாங்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 126 விமானங்களுக்கு பேசப்பட்ட விலையையும், பாஜக ஆட்சியில் 36 விமானங்களுக்கு பேசப்பட்ட விலையையும் எல்லா விவரங்களோடும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும் ஏ.கே.அந்தோணி வலியுறுத்தினார். இதேபோல, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறது என்றார். தங்களது ஆட்சிக் காலத்தில் மிகச்சிறந்த ஒப்பந்தத்தை பேசி முடித்ததாக காங்கிரஸ் உறுதியாக நம்பினால், ஏன் அதை அப்போது நிறைவேற்றவில்லை எனவும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பிரான்சின் டசால்ட் நிறுவனத்திற்கும், இந்தியாவின் ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கும் தயாரிப்பு தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். இதனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே, ரஃபேல் ஒப்பந்தத்தில் இருந்து ஹெச்ஏல் நிறுவனம் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.