​​ தமிழக அரசின் பட்ஜெட்டில், அதிகபட்சமாக பள்ளிக்கல்வித் துறைக்கு 27,205 கோடி ஒதுக்கீடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசின் பட்ஜெட்டில், அதிகபட்சமாக பள்ளிக்கல்வித் துறைக்கு 27,205 கோடி ஒதுக்கீடு


தமிழக அரசின் பட்ஜெட்டில், அதிகபட்சமாக பள்ளிக்கல்வித் துறைக்கு 27,205 கோடி ஒதுக்கீடு

Mar 15, 2018 5:33 PM

தமிழக அரசின் பட்ஜெட்டில், அதிகபட்சமாக பள்ளிக்கல்வித் துறைக்கு 27 ஆயிரத்து 205 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

100 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன. 200 கோடி ரூபாய் செலவில், நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த 333 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நலத்திட்டங்களுக்காக ஆயிரத்து 653 கோடியே 89 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மடிக்கணினி வழங்குவதற்கு 758 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு 313 கோடியே 58 லட்சம்

ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, உயர்கல்வித்துறைக்கு நான்காயிரத்து 620 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதி மற்றும் ராணி மேரிக் கல்லூரியில் உள்ள பாரம்பரியமக்க கட்டிடங்கள் 26 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளன. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டத்திற்காக 682 கோடியே 87 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நல்கைத் தொகை மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உள்பட, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக 500 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.