​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு - ஊர்வலம்

Published : Sep 16, 2018 8:58 AM

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு - ஊர்வலம்

Sep 16, 2018 8:58 AM

சென்னை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டுப் பூசை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 5 இடங்களில் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதுர்த்தியையொட்டிக் கடந்த வியாழனன்று சென்னையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்தச் சிலைகளுக்குக் கடந்த 3நாட்களாகப் பூசை நடைபெற்று வந்தது. நான்காம் நாளான இன்று பிள்ளையார் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டுக் கடலுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகின்றன.

விநாயகர் சிலை ஊர்வலம் வரும் பாதைகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் ஊர்வலம் நடைபெறும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், நீலாங்கரை, பட்டினப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தற்காலிகக் கோபுரம் அமைத்துக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலைகளைக் கரைக்க வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி ஆகியவை சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிலைகளைத் தூக்கிக் கடலில் போடுவதற்காகக் கிரேன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சிறிய சிலைகளைப் பக்தர்களே கைகளில் தூக்கிச் சென்று கடலில் கரைத்து வருகின்றனர். சிலை கரைக்கும் இடங்களில் கடலோரக் காவல்படையினர், மீனவர்கள் மீட்புப் பணிக்காகத் தயார் நிலையில் உள்ளனர். முதலுதவிக்காக மருத்துவக் குழுவினரும் உள்ளனர்.