​​ செங்கோட்டையில் கல்வீச்சு கலவரங்களுக்கு மத்தியில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கோட்டையில் கல்வீச்சு கலவரங்களுக்கு மத்தியில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.

செங்கோட்டையில் கல்வீச்சு கலவரங்களுக்கு மத்தியில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.

Sep 14, 2018 5:34 PM

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கல்வீச்சு கலவரங்களுக்கு மத்தியில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.

செங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், காவலர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் இருதரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பதற்ற நிலை நீடித்ததால் தென்காசி மற்றும் செங்கோட்டை தாலுகாக்களில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். ஊர்வலப் பாதையில் உள்ள 11 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன இரவு வரை போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் வழக்கமான பாதையில் விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல உடன்பாடு ஏற்பட்டது. 

பிற்பகலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. இந்நிலையில் மேலூர் என்ற இடத்தில் ஊர்வலம் சென்ற போது பாட்டில்கள் வீசப்பட்டதில் சிலர் காயம் அடைந்தனர். காவல் துறை வாகனம் ஒன்றும் ஒரு விநாயகர் சிலை ஒன்றும் சேதப்படுத்தப்பட்டன. தொடர்ந்து ஊர்வலம் சென்ற போது மற்றொரு இடத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டதையடுத்து ஊர்வலத்தில் சென்றவர்களும் கற்களை வீசித் தாக்கினர். கல்வீச்சில் ஊர்வலப் பாதையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றும் நொறுக்கப்பட்டது. கார்கள், இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் மற்றும் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சிலைகள் பாதுகாப்பாக தென்காசி குண்டாறுக்கு கொண்டு செல்லப்பட்டு கிரேன் மூலம் கரைக்கப்பட்டன.

இதனிடையே கலவரம் நடைபெற்ற மேலூர் பகுதியில் ஆட்டோவில் வந்த மர்மநபர் நபர் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து அந்த ஆட்டோவை மக்கள் அடித்து நொறுக்கினர். மர்ம நபரை கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தி மக்கள் போராட்டதிலும் ஈடுபட்டனர்.