​​ தமிழக அனல்மின் நிலையங்களில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது, பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அனல்மின் நிலையங்களில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது, பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழக அனல்மின் நிலையங்களில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது, பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Sep 14, 2018 3:38 PM

மூன்று நாட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளதால் தமிழக அரசுக்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்துமாறு, பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,நிலக்கரி நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் நிலக்கரியின் அளவு குறைந்துவிட்டதால், தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு அபாய அளவுக்கு குறைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 3 நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின்நிலையங்களில் தொடர்ச்சியாக மின்னுற்பத்தி செய்ய நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நாள்தோறும் 20 ரேக்குகள் நிலக்கரி வந்திறங்க வேண்டிய நிலையில், 7 முதல் 8 ரேக்குகள் மட்டுமே வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காற்றாலை மின்னுற்பத்தி பருவம் முடிவடையும் நிலையில், நிலக்கரி பற்றாக்குறையும் சேர்ந்து நிலைமையை மிகவும் சிக்கலாக மாற்றியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, தமிழக அரசுக்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்துமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும், நிலக்கரித்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்துமாறு பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.