​​ MP, MLA-க்கள் மீதான வழக்குகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
MP, MLA-க்கள் மீதான வழக்குகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

MP, MLA-க்கள் மீதான வழக்குகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Sep 12, 2018 7:29 PM

எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த விபரங்களை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி அஷ்வின் உபத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சஜன் பூவாயா, உச்சநீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என்றார்.

போக்சோ வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் இல்லாமல் இருப்பதை போலவே எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதிலும் அலட்சியம் காட்டப்படுவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான 1233 குற்றவியல் வழக்குகளும் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்ட நிலையில் 1097 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்ற நீதிபதிகள், எத்தனை வழக்குகளை நிலுவையில் உள்ளன, அவற்றுக்காக எத்தனை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்த நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணையில் நிலை என்ன என்பதை அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளர்கள் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிப்பதில் மெத்தன போக்கு நிலவுகிறதா என்பதை உச்சநீதிமன்றம் கண்காணிக்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர். மேலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டுமா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.