​​ அருண்ஜேட்லியை சந்திதேன் என விஜய் மல்லையா பேட்டி; அடிப்படையற்ற பொய்யான தகவல் என அருண்ஜேட்லி மறுப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அருண்ஜேட்லியை சந்திதேன் என விஜய் மல்லையா பேட்டி; அடிப்படையற்ற பொய்யான தகவல் என அருண்ஜேட்லி மறுப்பு

அருண்ஜேட்லியை சந்திதேன் என விஜய் மல்லையா பேட்டி; அடிப்படையற்ற பொய்யான தகவல் என அருண்ஜேட்லி மறுப்பு

Sep 12, 2018 6:50 PM

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது குறித்த வழக்கில் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுமென லண்டன் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனிடையே கடனை திருப்பி செலுத்துவது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேசியதாக விஜய் மல்லையா கூறியுள்ளார். ஆனால் இதனை அருண் ஜெட்லி மறுத்துள்ளார். 

பல்வேறு வங்கிகளில் 9000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை பெற்று, அதன் திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை, தாயகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்தினால் அவர் அடைக்கப்பட உள்ள மும்பை ஆர்தர் சாலை சிறை, அங்குள்ள அறை ஆகியவற்றின் வீடியோ நீதிபதி எம்மா அர்பூத் நாட்டிடம் அளிக்கப்பட்டது. அந்த வீடியோவில் மல்லையாவுக்கு ஒதுக்க உத்தேசித்துள்ள அறையில், கட்டில், மெத்தை, டிவி, மேற்கத்திய பாணியிலான கழிவறை, டைல்ஸ் பதிக்கப்பட்ட தளம் என பல்வேறு வசதிகள் உள்ளது என காட்டப்பட்டது. ஆனால் அந்த அறையில் போதிய சூரிய வெளிச்சம் இல்லையே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

போதிய சூரிய வெளிச்சம் இருப்பதாகவும், அறையில் வெப்பம் பரவாமல் தடுக்க திரைச்சீலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மல்லையா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்திய சிறைகளில் போதிய வசதி இருப்பதில்லை என்றும், சிறையில் எப்போதும் கைதிகளின் கூட்டம் நிரம்பி இருக்கும் என்றும், சிறைகள் சுகாதாரமின்றி, அசுத்தமாக இருக்கும் என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்மா இந்த வழக்கின் தீர்ப்பை டிசம்பர் மாதம் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மல்லையா, கடனை திருப்பி செலுத்த தாம் தயாராக இருப்பதாகவும், இதுகுறித்து இந்திய வங்கிகளுக்கு தாம் ஒரு திட்டத்தை அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கவே தாம் இந்தியாவில் இருந்து புறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் இருந்து புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாகவும், கடனை திருப்பி செலுத்துவது குறித்து பேசியதாகவும் மல்லையா தெரிவித்தார்.

ஆனால் விஜய் மல்லையாவை சந்திக்க ஒருபோதும் நேரம் ஒதுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தம்மை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறுவது முற்றிலும் தவறு எனக் கூறியுள்ளார். மல்லையாவை சந்திக்க தாம் ஒருபோதும் நேரம் ஒதுக்கியது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவை எம்.பியாக இருந்த மல்லையா, ஒரு நாள், அவை முடிந்து தாம் அறைக்கு திரும்பிய போது, தமக்கு பின்னால் ஓடி வந்து ஓரிரு வார்த்தைகள் பேசியதாக அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

வங்கி கடன்களை செலுத்த சமரச தீர்வுக்கு தயாராக இருப்பதாக மல்லையாக கூறியதாகவும், இதன் வங்கி நிர்வாகங்களிடம் தெரிவிக்குமாறு கூறி விட்டு தாம் சென்று விட்டதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் என்ற சலுகையை பயன்படுத்தி, அந்த அவை வளாகத்தில் பேசிய ஓரிரு வார்த்தைகளை மல்லையா கூறுவதாகவும் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.