​​ திருச்சி பேருந்து நிலைய இருசக்கர வாகனம் நிறுத்தும் மையத்தில் 3 மடங்கு கட்டண வசூல் என புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சி பேருந்து நிலைய இருசக்கர வாகனம் நிறுத்தும் மையத்தில் 3 மடங்கு கட்டண வசூல் என புகார்

திருச்சி பேருந்து நிலைய இருசக்கர வாகனம் நிறுத்தும் மையத்தில் 3 மடங்கு கட்டண வசூல் என புகார்

Sep 12, 2018 5:57 PM

திருச்சி மத்திய பேருந்து நிலைய இருசக்கர வாகனம் நிறுத்தும் மையத்தில், 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் இரவு, பகல் பாராமல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் 3 அடுக்கு இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது. 

ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி கொண்ட இங்கு, ஆயிரகணக்கான வாகன ஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். 

மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தனியார் ஒப்பந்தம் பெற்று இயங்கிவரும் இந்த இருசக்கர வாகன நிறுத்தம் மையத்தில், இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்திவைக்க 24 மணி நேரத்திற்கு 5 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருசக்கர வாகன நிறுத்துமிட குத்தகைதாரர் 12 மணி நேரம் நிறுத்திச் செல்லும் வாகனங்களுக்கு கூட 5 ரூபாய் டோக்கனை கொடுத்து தலா 10 ரூபாய்  அடாவடியாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

மேலும், 24 மணி நேரத்திற்கு ஒரு இருசக்கர வாகனத்திற்கு 5 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்கிற நிலையில் ஒப்பந்ததாரர் 20 ரூபாய் வசூலிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, 3 மடங்கு தொகை அதிகமாக வசூலிக்கப்பட்டு, முறைகேடு நடைபெறுவதாகவும், இது குறித்து கேட்டால் அங்குள்ள ஊழியர்கள் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 10 ரூபாய், 20 ரூபாய் என்று வசூலித்தாலும் வாகன ஓட்டிகளுக்கு வெறும் 5 ரூபாய்க்கான டோக்கன் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அதிக நாட்கள் வாகன் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு எடுத்துச் செல்லும் வாகனங்களிடமும் நூற்றுக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டாலும் டோக்கன் 5 ரூபாய்க்கு மட்டுமே விநியோகிக்கப்படுவதும் முறைகேட்டை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

இதன் மூலம் மாதம் தோறும் லட்சக்கணக்கில் முறைகேடாக ஒப்பந்ததாரர் வசூலிப்பதாகவும், இது குறித்து மாநகராட்சியிடம் புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர் வாகன ஓட்டிகள். 

அதிகாரிகள் உடனடியாக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, வாகன நிறுத்த கட்டண வசூலை முறைபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.