​​ விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள்..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள்..!

Published : Sep 12, 2018 4:16 PM

விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள்..!

Sep 12, 2018 4:16 PM

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2,500 சிலைகள் வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. 

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி, பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ்’, பெயிண்ட் அடிக்கப்பட்டது என ரசாயன மாசு ஏற்படுத்தும் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் தாண்டக்கூடாது.

பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே பிரதிஷ்டை செய்வதை தவிர்க்க வேண்டும்.  வகுப்புவாத வெறுப்பை தூண்டும் வகையில் கோஷம் போடுவதோ, பிற மதத்தின் உணர்வுகளை புண்படுத்துவதோ எந்தவித சூழலிலும் அனுமதிக்கப்படமாட்டாது.

விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்பவர்கள் பொது அமைதி, சமூக நல்லிணக்கம் கருதி வருவாய், போலீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விதித்த விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு என்று அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட இடங்களிலேயே கரைக்கவேண்டும். பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் கரைப்பதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்வதற்கு மினி லாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. விநாயகர் சிலைகளை கரைக்கும்போது பூக்கள், துணிகள், அலங்கார பொருட்கள் எடுக்கப்படவேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் வேலியிடப்பட்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.