​​ சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Sep 11, 2018 4:09 PM

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்தால், திட்ட பணிகளுக்கு தடை விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம்  எச்சரித்துள்ளது.

சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விவசாயிகள், நில உரிமையாளர்கள், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும், மரங்கள் வெட்டப்படுவதாகவும் நில உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மரங்களை வெட்ட அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும், நில உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே
நிலங்கள் கையகப்படுத்துவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தி அரசு உத்தரவு பிறப்பித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அரசின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினர். நிலம் கையகப்படுத்த மாட்டோம், மரங்கள் வெட்ட மாட்டோம் என்று அரசு வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்ததற்கு மாறாக அதிகாரிகள் செயல்படுவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த திட்டத்திற்கும் தடை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர். ஒருவருடைய நிலத்தை அவருக்கு தெரியாமலேயே கையகப்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் வேதனை அடைவார்கள் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தனியார் நிலத்தை அவருக்கு தெரியாமல் கையகப்படுத்துவது சரியாக இருக்காது என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

8 வழி சாலை திட்டத்திற்காக எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன மற்றும் முடிந்துள்ள அளவீடு பணிகள்  குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் மதிப்பீடு முடிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.