​​ ரெப்கோ வங்கி மேலாளர் வீட்டின் கொள்ளை சம்பவம் குறித்து பணிப்பெண் அளித்த தகவலின்பேரில், 4 பேர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரெப்கோ வங்கி மேலாளர் வீட்டின் கொள்ளை சம்பவம் குறித்து பணிப்பெண் அளித்த தகவலின்பேரில், 4 பேர் கைது

ரெப்கோ வங்கி மேலாளர் வீட்டின் கொள்ளை சம்பவம் குறித்து பணிப்பெண் அளித்த தகவலின்பேரில், 4 பேர் கைது

Sep 11, 2018 11:45 AM

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் ரெப்கோ வங்கி மேலாளரின் வீட்டில் கத்தியைக் காட்டி 227 சவரன் கொள்ளையடித்த வழக்கில், வீட்டு பணிப்பெண்ணை பிடித்து விசாரித்த போலீசார், மதுரையில் 4 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் ரெப்கோ வங்கி மேலாளராக இருக்கும் யோகசேகரன், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள கார்டன் உட்ராப் நகரில் வசித்துவருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யோகசேகரனும், அவரது மனைவி சுப்புலட்சுமியும் வீட்டில் இருந்தபோது, அங்கு முகமூடி அணிந்துவந்த கொள்ளையர்கள் இருவரையும் கத்தியைக்காட்டி மிரட்டி, கட்டிப்போட்டனர். பின்னர் வீட்டுப் பீரோவில் இருந்த 200 சவரன் நகைகளையும், சுப்புலட்சுமி கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 27 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பான புகாரில், யோகசேகரன் வீட்டில் வேலைபார்த்த மகாராணி என்பவர் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த மகராணியிடம் தொடர்ந்து நடைபெற்ற கிடுக்கிப்பிடி விசாரணையில் நாகையைச் சேர்ந்த அருண்குமார், மதுரையைச் சேர்ந்த செல்வம், சுரேஷ், கௌதம் ஆகிய 4 பேர் கொள்ளையில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

யோகேஸ்வரன் வீட்டில் கொள்ளையடித்த நகைகளுடன் வாடகை காரில் கோவைக்குச் சென்ற 4 பேரும், அங்குள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 7 சவரன் நகைகளை அடகு வைத்து, 90 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். மீதமுள்ள 220 சவரன் நகைகளை கோவையில் உள்ள அருண்குமார் வீட்டில் பதுக்கிவிட்டு, அங்கிருந்து 4 பேரும் மதுரைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

பணிப்பெண் மகாராணி அளித்த தகவலின்பேரில், 4 பேரின் செல்போன் சிக்னல்களை வைத்து கண்காணித்த போலீசார், உதவி ஆய்வாளர் சுமன் தலைமையில் மதுரைக்குச் சென்று 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரும் கரிமேடு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை கோவை அழைத்துச் சென்று நகைகளை மீட்பதற்காக, குரோம்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் சந்திரசேகரன் மதுரை சென்றுள்ளார்.

இதனிடையே, நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக்கொடுத்த பணிப்பெண் மகாராணி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.