​​ கோவில்பட்டி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு - 7 மணி நேரத்திற்கு பின் ரயில்கள் மீண்டும் இயக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில்பட்டி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு - 7 மணி நேரத்திற்கு பின் ரயில்கள் மீண்டும் இயக்கம்

கோவில்பட்டி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு - 7 மணி நேரத்திற்கு பின் ரயில்கள் மீண்டும் இயக்கம்

Sep 11, 2018 8:51 AM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அறுந்துவிழுந்த ரயில்வே மின்கம்பி சரி செய்யப்பட்டதை அடுத்து, 7 மணி நேரம் தாமதமாக ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

கோவில்பட்டியில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் பிளாஸ்டிக் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை பெயர்ந்து, ரயில்களுக்கான மின்கம்பியில் விழுந்தது. இதனால், ரயில்வே மின்கம்பி அறுந்துவிழுந்து, 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சாரம் தடைபட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக மின்சாரத்தை துண்டித்து, அறுந்துவிழுந்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, தென்மாவட்டங்களில் இருந்து கோவில்பட்டி மார்க்கத்தில் வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பயணிகள் அவதிக்கு ஆளான நிலையில் ஒரு சில பயணிகள் ரயில்கள் மட்டும் மாற்று ஏற்பாடாக டீசல் எஞ்சின்கள் மூலம் இயக்கப்பட்டன. இருப்பினும், நீண்டதூரம் செல்லக்கூடிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்ததால், ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களில் பயணிகள் பல மணி நேரமாக காத்திருந்தனர்.

இதனிடையே, அறுந்துவிழுந்த மின்கம்பியை தற்காலிகமாக சீரமைத்த ரயில்வே பணியாளர்கள், குறிப்பிட்ட பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலேயே ரயில்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து, கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, திருச்செந்தூர், அனந்தபுரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டுச் சென்றன.

சுமார் 7 மணி நேரத்துக்கு பிறகு ரயில் சேவை சீரானது. அறுந்துவிழுந்த மின்கம்பியை சீரமைக்க 2 நாட்கள் ஆகும் என்பதால், அதுவரை குறிப்பிட்ட பகுதியில் குறைந்த வேகத்திலேயே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.