​​ 100 சவரன் நகைக்காக நிறுத்தப்பட்ட ஆசிரியையின் திருமணம்..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 சவரன் நகைக்காக நிறுத்தப்பட்ட ஆசிரியையின் திருமணம்..!

100 சவரன் நகைக்காக நிறுத்தப்பட்ட ஆசிரியையின் திருமணம்..!

Sep 11, 2018 6:49 AM

திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு, ஆசிரியையின் திருமணத்தை நிறுத்திய தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன். இவருக்கும் காட்டூரை சேர்ந்த ஆசிரியை சுகந்தி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 17 ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக 50 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்டு 22 ந்தேதி இரு வீட்டாரும் சேர்ந்து பெண்ணுக்கு முகூர்த்தப்பட்டு எடுப்பதற்கு பிரபல ஜவுளிக்கடைக்கு சென்றனர்.

தங்களது பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சேலை எடுத்துதரவேண்டும் என்று பெண் வீட்டார் கேட்க, மாப்பிள்ளை வீட்டாரோ 20 ஆயிரம் ரூபாய்க்கு தான் பட்டுச்சேலை எடுப்போம் என்று அடம்பிடிக்க இரு தரப்புக்கும் மனக்கசப்பு உருவானது. இறுதியில் 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் முகூர்த்தப் பட்டு வாங்கினர்.

அதில் இருந்தே இரு வீட்டாருக்கும் இடையே விரிசல் விழ, திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு ஒரு நிபந்தனை விதித்தனர், தனது மகன் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிவதால் 100 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், கூடவே ஒரு காரும் வரதட்சணையாகக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். ஏற்கனவே பேசியது 50 சவரன் தானே என்றபோது, 100 சவரன் கொடுக்க முடியாவிட்டால் திருமணம் நடக்காது என்று கறாராக கூறிவிட்டானர்.

இதனால் நாளை நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. உறவினர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்தனர்.

கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டார் தலைமறைவாகிவிட, பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவன அதிகாரியான மணமகன் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான மணமகனின் தாய், தந்தை, சகோதரியை வலைவீசித் தேடி வருகின்றனர்.

100 சவரன் வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டாரால் மட்டும் திருமணம் நின்று போகவில்லை, பட்டுச் சேலையில் கறார் காட்டி மனக்கசப்பை ஆரம்பித்து வைத்த பெண் வீட்டாரின் பிடிவாதமும் ஒரு காரணம் என்கின்றனர் காவல்துறையினர்.

இருமனங்கள் இணைவது மட்டும் திருமணம் அல்ல, இரு வீட்டார் மனங்களும் இணைவதுதான் திருமண பந்தம் சிறக்க வழி என்பதை உணர்ந்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றிருந்தால் திருமணம் தடைபட்டிருக்காது என்பதே இந்த சம்பவம் உணர்த்தும் பாடம்..!