​​ பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்

பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்

Sep 11, 2018 6:09 AM

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தால், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84 ரூபாய் ஐந்து காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 13 காசுகளாகவும் உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 88 ரூபாய் 26 காசுகளை எட்டியது.

2011 - 2012 ஆம் ஆண்டு நிலவரத்தோடு ஒப்பிடும்போது, தற்போது கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 31 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதும், மத்திய, மாநில அரசுகளின் 46 சதவீத வரி விதிப்பும் விலையேற்றத்தை உச்சபட்சத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடு தழுவிய நேற்று முழு அடைப்பில் ஈடுபட்டன. இருந்த போதிலும் கலால் வரியைக் குறைக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தால், 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேவேளையில் மதிப்பு கூட்டு வரிகளை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என அறிவுரை வழங்கியுள்ளனர். வரிகளின் மூலம் ஈட்டப்படும் வருவாயில் 40 சதவீதம் மாநிலங்களுக்கே செல்வதால், கலால் வரியை குறைப்பது அனைவரையும் பாதிக்கும் என மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

மக்கள் பிரச்சனையை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மக்களுடன் துணை நிற்போம் எனவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.