​​ பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம்..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம்..!

பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம்..!

Sep 10, 2018 5:45 PM

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் பல மாநிலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தது. இந்த போராட்டத்திற்கு இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள், திமுக, உள்ளிட்ட 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

ஒடிசா மாநிலத்தில் காலை 7 மணிக்கே காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாநிலத்தின் சம்பால்பூரில் நடைபெற்ற போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதே போன்று புவனேசுவரத்திலும் காங்கிரசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. விஜயவாடாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கர்நாடக மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பெங்களூரு நகரில் முக்கிய கடைவீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 

தெலங்கானா மாநிலம் பாவனகிரி, முர்ஷிதாபாத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் உள்ளிட்ட பல ஊர்களில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் டயர்களை கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடைகளை அடைக்கச் சொல்லி காங்கிரசார் கற்களை வீசி எறிந்தனர். பல கடைகளும் அடைத்து உடைக்கப்பட்டன. வன்முறை மூண்டதை அடுத்து கடைகள் அடைக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சத்தீஷ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவதை வீதி நாடகமாக நடித்துக் காட்டினர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் பலர் தங்களின் தோள்களில் மோட்டார் சைக்கிளை தூக்கி வைத்து முழக்கமிட்டனர்.

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜெனியில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு திறந்திருந்த பெட்ரோல் பங்கு ஒன்றை அவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் காங்கிரசார் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தேரி ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதே போன்று மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் கடைகளை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லோக் தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, அங்கிருந்து ராம் லீலா மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்டார்.

ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, முக்கிய பிரச்சனைகளில் எல்லாம் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக கூறினார். மகளிருக்கு எதிரான வன்முறை, விவசாயிகளின் தற்கொலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு  உள்ளிட்ட எந்த பிரச்சனை குறித்தும் மோடி கருத்து தெரிவிக்காத து ஏன் என அவர் கேள்வி தொடுத்தார்.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பல மாநிலங்களில் சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.