​​ குட்கா ஊழல் வழக்கில், மாதவராவ் உள்ளிட்ட 5 பேருக்கு சி.பி.ஐ காவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா ஊழல் வழக்கில், மாதவராவ் உள்ளிட்ட 5 பேருக்கு சி.பி.ஐ காவல்

குட்கா ஊழல் வழக்கில், மாதவராவ் உள்ளிட்ட 5 பேருக்கு சி.பி.ஐ காவல்

Sep 10, 2018 5:15 PM

குட்கா முறைகேடு வழக்கில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ் உள்பட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

குட்கா முறைகேடு வழக்கில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே பாண்டியன் ஆகிய 5 பேரை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை முதன்மை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி திருநீல பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாதவராவ் உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே, இதில் தொடர்புடைய மற்ற நபர்களின் விவரங்கள் தெரியவரும் என்று, சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் தரப்பு வழக்கறிஞர், மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் இன்றி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

மேலும், தேவையற்ற முறையில் 5 பேரையும் துன்புறுத்தவும் நிர்பந்திக்கவுமே நீதிமன்றக் காவல் கோருவதாக அவர் வாதிட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர், குட்கா விவகாரத்தில் பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் பலர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

எனவே 5 பேரையும் விசாரித்தால் மட்டுமே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும், அப்போதுதான் வழக்கை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, மாதவராவ் உள்ளிட்ட 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.