​​ ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

Published : Sep 10, 2018 1:47 PM

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

Sep 10, 2018 1:47 PM

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து, அந்த அமைப்பிடமே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர முடியாது என்றும் வாதிட்டார்.

மேலும், தமிழக அரசின் கருத்தை கேட்காமல், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆய்வுக்குழு அமைத்தது தவறு என்றும், அதன் ஆய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்யும் முன்னர், தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், தமிழக அரசின் விளக்கத்துடன் கூடிய அறிக்கையையே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.