​​ பாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு

பாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு

Sep 10, 2018 10:44 AM

பாரத் பந்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத நிலையில், ஒரு சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்காததால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் முழு அடைப்பு நடைபெற்று வருவதால், நெல்லையில் இருந்து செல்லும் வாகனங்கள் புளியரை சோதனைச் சாவடியில் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதனால், கேரளாவுக்கு கூலி வேலைக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நெல்லை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையான செங்கோட்டை பேருந்து நிலையம், பேருந்துகளும், பயணிகளும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மருந்துக் கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. நகர்ப்பகுதியில் 50 சதவீத ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. காய்கறிச் சந்தை, மலர் சந்தை ஆகியவை செயல்படாத நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவில் 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், டாக்சிகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பயணிகள் வாகனங்கள் எதுவும் வரவில்லை.

திருச்சி மாநகரில் கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ள நிலையில், நெம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மட்டும் கடைகள், உணவகங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. நேற்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று, முழு அடைப்பு போராட்டத்தில் அப்பகுதி வியாபாரிகள் பங்கேற்றுள்ளதுடன், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காத நிலையில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காத நிலையில், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், அரசு பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. ஆனால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. மேலும், திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

கடலூர் நகரப் பகுதியிலும், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் முழுமையாக இயங்கினாலும், 50 சதவீத தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, தேவதானம்பட்டி, தாழங்குடா, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200 பேரை போலிசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், திருவாரூர், பேரளம் ஆகிய பேருந்து நிலையங்கள் முன்பு மறியல் நடைபெற்றது

கோவையில் சுமார் 70 சதவீதம் வரை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரிய கடைவீதி,ஒப்பனக்காரவீதி, குமரன் மார்க்கெட் மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதியில் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கினாலும், 50 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை.

சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வண்ணாரப்பேட்டையில் சுமார் 2ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்பட 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

திருப்பதியில் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், சாலை மறியலும் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இருசக்கர வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து, நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பலரும் பங்கேற்றனர்.

பாரத் பந்துக்கு ஆதரவாக, சென்னை பர்மா பஜாரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பர்மா பஜார் வியாபாரிகள் 2 பிரிவாக செயல்பட்டு வருவதால், அதில் ஒரு தரப்பினர் பகல் 12.30 வரையும், மற்றொரு பிரிவினர் 3 மணி வரையும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படாததால், சுற்றுலாப் பயணிகள் இன்றி படகு சவாரி செய்யும் ஏரி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், பிரையண்ட் பூங்கா பகுதியும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது.