​​ பாரத் பந்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரத் பந்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்

பாரத் பந்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்

Sep 10, 2018 7:33 AM

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில்  இயல்புவாழ்க்கையில் பாதிப்பில்லை.

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு, திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனாலும் சென்னை மாநகரில் பெரும்பாலான மளிகைக்கடைகள், டீக்கடைகள், உணவகங்கள், பெட்டிக்கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பங்குகள் என அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன.

image

சென்னை மாநகர அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் நிலையில், ஷேர் ஆட்டோ, ஆட்டோ, டாக்சிகள் என அனைத்தும் இயங்கி வருகின்றன. இருப்பினும், பாதுகாப்பு கருதி பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிறபகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கப்பட்டாலும், கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சுமார் 90 சதவீதம் வரை மளிகைக்கடைகள், உணவகங்கள் தனியார் நிறுவனங்கள் திறந்துள்ளன. உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல், திருப்பதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களிலும் கூட்டம் வழக்கம் போலவே காணப்படுகிறது.

சேலம் மாநகரிலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயங்குகின்றன. ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடும் நிலையில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை வழக்கம்போல் செயல்படுகிறது. காய்கறிச் சந்தை, மலர் சந்தை, பழச் சந்தை ஆகியவை வழக்கம்போல் இயங்குவதால், சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.