​​ தமிழக அரசின் தூய்மைப்பள்ளி விருது பெற்ற தொட்டம்பாளையம் அரசுப் பள்ளி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசின் தூய்மைப்பள்ளி விருது பெற்ற தொட்டம்பாளையம் அரசுப் பள்ளி

தமிழக அரசின் தூய்மைப்பள்ளி விருது பெற்ற தொட்டம்பாளையம் அரசுப் பள்ளி

Sep 10, 2018 7:22 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே  பொதுமக்களால் தானம் அளிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டு, தமிழக அரசின் தூய்மைப்பள்ளி விருதைப் பெற்ற பள்ளியைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையத்தில் விளைநிலங்களுக்கு மத்தியில் 3 ஏக்கரில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. நேர்த்தியான கட்டிடங்கள், பேவர் பிளாக் கற்கள் ((Paver Block)) பதித்த நடைபாதை, வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் என அழகாக காட்சி தருகிறது அந்தப் பள்ளி.

தொட்டம்பாளையம் ஊருக்குள்ளேயே நடுநிலைப் பள்ளியாக இருந்தபோது, கூடுதல் கட்டிடம் கட்ட இடம் இன்றி போனது. இதனால் 20 ஆண்டுகளுக்கு முன்னரே, விளைநிலங்களுக்கு மத்தியில் இருந்த 3 ஏக்கர் நிலத்தை வாங்கி பள்ளிக்காக தானம் அளித்துள்ளனர் கிராம மக்கள். அந்த நிலத்தில் பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு, அடுத்தடுத்து தரம் உயர்ந்து, மேல்நிலைப்பள்ளியாகவும் ஆனது.

விளைநிலங்களுக்கு மத்தியில் அமைந்ததாலோ என்னவோ, பள்ளி வளாகம் முழுவதும் மரங்கள் வளர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு, சொட்டுநீர் பாசனத்தில் நீர் பாய்ச்சப் படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பில் பயிலும் மாணவர்கள் இவற்றை பராமரிக்கின்றனர். இதன் மூலம் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

850 மாணவ மாணவியர் பயிலும் இப்பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் பொதிந்த சாக்லெட் போன்ற உணவுப்பண்டங்களுக்குக் கூட அனுமதியில்லை. பிறந்த நாளுக்கு இனிப்பு தர விரும்பினால், கற்கண்டு, ஆரஞ்சு மிட்டாய் போன்றவையே வழங்கலாம்.

ஸ்மார்ட் வகுப்பறை, மிகப்பெரிய அறிவியல் ஆய்வுக்கூடம், சுகாதாரமான மதிய உணவு சமையல் கூடம், டைல்ஸ் பதிக்கப்பட்ட சுத்தமான கழிவறைகள், மாணவர்கள் கைகளை கழுவ பிரத்யேக அமைப்பு என சகல அம்சங்களும் தொட்டம்பாளையம் பள்ளியில் இடம்பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவு உண்ண வேண்டும் என்பது கட்டாயம். 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விரும்பினால் சத்துணவு உண்ண அனுமதிக்கப்படுகிறது. ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் தொட்டம்பாளையம் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழக அரசு, 2017 - 2018 கல்வி ஆண்டுக்கான தூய்மைப்பள்ளி விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

தொட்டம்பாளையம் பள்ளி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும், 7 ஆண்டுகளாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் தொடர்ச்சியாக நூறு சதவிகித தேர்ச்சி பெற்று வருகிறது. இதன் காரணமாகவே, ஈரோடு மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் பள்ளியில் சேர்ந்து பயில போட்டி போட்டு வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் பெருந்தொகை செலுத்தி பிள்ளைகளை சேர்க்கும் மோகம் பெருகியுள்ள நிலையில், கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு வரமாக அமைந்துள்ள இதுபோன்ற அரசுப்பள்ளிகள் மாநிலம் முழுவதும் பெருக வேண்டும்.