​​ பிரதமர் மோடியை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் - பாஜக குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் - பாஜக குற்றச்சாட்டு

பிரதமர் மோடியை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் - பாஜக குற்றச்சாட்டு

Sep 09, 2018 4:08 PM

எதிர்கட்சிகள் கூட்டணிக்கு தலைவரோ, கொள்கையோ இல்லை என்றும், மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தடுத்து நிறுத்துவது மட்டுமே அவர்களது நோக்கம் என்றும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. அமித் ஷா பதவி காலம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைவதால், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்தும், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் 2022ஆம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் என அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேர்தலில் பாஜகவை வீழ்த்த நினைப்பது பகல் கனவாகவே முடியும் என தெரிவித்தார்.

பின்னர், தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், வரும் 2022ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை படைப்போம் என்றும் தெரிவித்தார்.

தீவிரவாதம், மதவாதம், சாதியவாதம் இல்லாத புதிய இந்தியா 2022ஆம் ஆண்டுக்குள் படைக்கப்படும் எனக் கூறிய அவர், வீடுகள் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என தெரிவித்தார். நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கும் பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்பதே எதிர்க்கட்சி கூட்டணியின் நோக்கம் என்றும், உண்மையில் அவர்களிடம் தலைவரோ, கொள்கையோ இல்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்தார்.