​​ படிக்கட்டில் பயணித்த மாணவருக்கு சரமாரி அடி..! அரசு பேருந்து நடத்துனர் ஆவேசம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
படிக்கட்டில் பயணித்த மாணவருக்கு சரமாரி அடி..! அரசு பேருந்து நடத்துனர் ஆவேசம்

Published : Sep 08, 2018 9:29 PM

படிக்கட்டில் பயணித்த மாணவருக்கு சரமாரி அடி..! அரசு பேருந்து நடத்துனர் ஆவேசம்

Sep 08, 2018 9:29 PM

அரசு பேருந்து ஒன்றில் சொல்பேச்சு கேட்காமல் படிக்கட்டில் பயணம் செய்த மாணவரை, நடத்துனர் ஒருவர் அடித்து உதைத்த சம்பவம்  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  நடந்துள்ளது 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து செங்குன்றத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. அப்போது, அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் பேருந்தின் பின்வாசலில் ஏறி, படிக்கட்டில் நின்றவாறு பயணித்துள்ளார். பேருந்தின் நடத்துனர் கண்ணன் என்பவர், அந்த மாணவனை மேலே ஏறும்படி பலமுறை சொல்லியும், அவர் சொல்பேச்சு கேட்காமல் படிக்கட்டிலேயே நின்று உள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பேருந்தை நிறுத்திய நடத்துனர் கண்ணன், அந்த மாணவனை பேருந்தில் இருந்து மிதித்து தள்ளியதாகவும் , கீழே விழுந்த மாணவனின் சட்டையை பிடித்து சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது

பேருந்தில் இருந்த பயணிகளும், வாகன ஓட்டிகளும் சமாதானம் செய்தபோதும், மாணவனின் சட்டையை கெட்டியாக பிடித்துக்கொண்டு சரமாரியாக புரட்டி எடுத்தார் நடத்துனர் கண்ணன

ஓட்டுனர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி காவல்துறையினரிடம் அந்த மாணவனை ஒப்படைத்தார் நடத்துனர் கண்ணன். மாணவனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தனது மகனை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அனைவர் முன்னிலையிலும் நடத்துனர் சரமாரியாக தாக்கியதாக மாணவனின் தாய் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கும் சில மாணவர்கள் யார் சொன்னாலும் கேட்பதில்லை என்றும், பெண் பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்களிடம் சில நேரம் கைகளாலும் பேசவேண்டிய நிலை ஏற்பட்டு விடுவதாக பேருந்து நடத்துனர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஓடும் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்தானது என்பதை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்தால், கடுமையான தண்டனை என்ற விதி இருந்தால் மட்டுமே இப்படிபட்ட அடிதடி பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்ப்படும்