​​ அங்கீகாரமற்ற பல்கலை கழகங்களின் பட்டங்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு இல்லை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அங்கீகாரமற்ற பல்கலை கழகங்களின் பட்டங்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு இல்லை

அங்கீகாரமற்ற பல்கலை கழகங்களின் பட்டங்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு இல்லை

Sep 08, 2018 9:25 PM

அங்கீகாரமில்லாத பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பட்டங்கள் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றால், தமிழக அரசு ஊக்க ஊதிய உயர்வு வழங்கி வருகிறது. இந்த வகையில், சேலம் விநாயகா நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்றவர்கள், ஊக்க ஊதிய உயர்வு பெற்றனர். ஆனால், சேலம் விநாயகா பல்கலைக்கழக பட்டங்கள், பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி செல்லத்தக்கதல்ல என தணிக்கை அதிகாரி எதிர்ப்பு தெரிவித்ததால், ஊக்க ஊதிய உயர்வு ரத்தானது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், அங்கீகாரம் இல்லாத பல்கலைக் கழகங்களில் தொலைதூர கல்வி மூலம் பெற்ற பட்டங்களைக் கொண்டு, ஊக்க ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என குறிப்பிட்டார். மனுதாரர்கள் பெற்ற ஊக்க ஊதிய உயர்வை சட்டப்படி திரும்பப் பெற, 12 வாரங்களில் உரிய ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு நீதிபதி ஆணையிட்டார்.