​​ ரயில் பயணச்சீட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வந்த தனியார் முன்பதிவு மைய உரிமையாளர்கள் இருவர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் பயணச்சீட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வந்த தனியார் முன்பதிவு மைய உரிமையாளர்கள் இருவர் கைது

ரயில் பயணச்சீட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வந்த தனியார் முன்பதிவு மைய உரிமையாளர்கள் இருவர் கைது

Sep 08, 2018 8:15 PM

சென்னையில் ரயில் பயணச்சீட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வந்த  தனியார் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் தனியார் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் சென்னை வில்லிவாக்கம் மற்றும் புழுதிவாக்கத்தில் உள்ள தனியார் பயணச்சீட்டு மையங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, போலிப்  ஐ.டி.க்கள் மூலம், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து அவற்றை கூடுதல் விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து அந்த தனியார் மையத்தின் உரிமையாளர்கள் இருவரைக் கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கடந்த 8 மாதங்களில் இதேபோல் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்று வந்த 40 தனியார் மையங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், வரும் காலத்திலும் சோதனை தொடரும் என்றும் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளனர். எனவே ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ஒதுக்கப்படும் பயணச்சீட்டுகளைப் பெற்று பயணிகளிடம் விற்கும் தனியார் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள், நேர்மையாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பயணிகளும், தங்களது அவசரத்தை மட்டும் கருத்தில் கொண்டு தனியார் மையங்கள் கேட்கும் கூடுதல் தொகையை கொடுத்து விட்டு, தவறுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.