​​ சென்னையில் பங்குச்சந்தை ஆலோசகர் காரில் கடத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் பங்குச்சந்தை ஆலோசகர் காரில் கடத்தல்

Published : Sep 08, 2018 3:26 PM

சென்னையில் பங்குச்சந்தை ஆலோசகர் காரில் கடத்தல்

Sep 08, 2018 3:26 PM

மோசடி வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்னை திரும்பிய பங்குச்சந்தை ஆலோசகர் சென்னை மதுரவாயலில் மர்மநபர்களால் கடத்தப்பட்டார். 

சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் கணேஷ். பங்குச்சந்தை ஆலோசகரான இவர் வளசரவாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல கால் டாக்சியில் சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆலப்பாக்கம் அருகே கால் டாக்சி வந்த போது பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று கணேஷ் சென்ற காரை முந்திச் சென்று வழிமறித்து நின்றது. பின்னர் காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட மர்மக்கும்பல், கணேசை அவர்களது காரில் கடத்தி சென்றது. இதுகுறித்து கால் டாக்சி ஓட்டுநர் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் தனிப்படை அமைத்து மர்மக்கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெங்களூருவில் அலுவலகம் நடத்தி வந்த கணேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி விட்டு சென்னைக்கு வரும்போதுதான் கணேஷ் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது கூலிப்படையை வைத்து கணேசை கடத்தினார்களா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கணேசின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்தும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.