​​ சொந்த படத்தால் நஷ்டம் நான் சாகபோகிறேன்..! சினிமா இயக்குனர் உருக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொந்த படத்தால் நஷ்டம் நான் சாகபோகிறேன்..! சினிமா இயக்குனர் உருக்கம்

சொந்த படத்தால் நஷ்டம் நான் சாகபோகிறேன்..! சினிமா இயக்குனர் உருக்கம்

Sep 06, 2018 9:45 PM

விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல் காவல்காரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களின் இயக்குனரான செந்தில் நாதன், சொந்தபடம் எடுத்து நஷ்டமானதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதால் அவரை தேடி வருகின்றனர்

எம்.ஜி. ஆர் அடித்த நம் நாடு படத்தின் இயக்குனரான ஜம்புலிங்கத்தின் மகன் தான் தற்கொலை முடிவை தேடி அலையும் பிரபல இயக்குனர் செந்தில்நாதன்..!

நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ .சந்திர சேகரிடம் 7 ஆண்டுகளாக 30 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய செந்தில் நாதன் நடிகர் விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் என்ற வெள்ளி விழா படத்தை இயக்கியவர்.

தொடர்ந்து சரத்குமாரரை வைத்து 6 படங்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய செந்தில் நாதன், உன்னை நான் என்ற பெயரில் சொந்த படம் தயாரித்தார். 2009 ஆம் ஆண்டில் இருந்து அந்த படத்தை வெளியிட இயலாமல் கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்டார்.

அந்த கடனை சமாளிக்க தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார், சில தொலைகாட்சி தொடர்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் நாயகி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவருக்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் தனது சொந்த படத்தை விற்க முயன்றார். அதனை வாங்கவோ வெளியிடவோ எவரும் முன்வரவில்லை. கடன் நெருக்கடியால் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில் நாதன், காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், தற்கொலை செய்து கொள்ளபோவதாகவும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்

அவரை மீட்டு பண உதவி செய்யும் பொருட்டு தயாரிப்பாளர்கள் சிலர் கார்களில் காஞ்சிபுரம் விரைந்தனர், இயக்குனர் செந்தில் நாதன் விபரீத முடிவு எதையும் எடுப்பதற்கு முன்பாக மீட்பதற்கு காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் அவரை காவல்துறையினர் உதவியுடன் சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் தேடிவருகின்றனர். ஏற்கனவே சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் அவல நிலையை உணர்த்திவிட்டு சென்ற நிலையில், தற்போது செந்தில் நாதன் அந்த விபரீத முடிவை தேட முயற்சிப்பது வேதனையளிப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல கோடிகள் புரளும் சினிமாவில் ஆடம்பர வாழ்க்கையில் புரளுபவர்கள் ஒருபுறம் என்றால் அதனை நம்பி தெருக்கோடிக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு நிகழ்கால உதாரணமாய் மாறி இருக்கின்றது செந்தில் நாதனின் வாழ்க்கை..!