​​ மருமகளுக்கு ஆபாச SMS..! - மகனின் வாழ்க்கையை கெடுத்த தந்தை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருமகளுக்கு ஆபாச SMS..! - மகனின் வாழ்க்கையை கெடுத்த தந்தை


மருமகளுக்கு ஆபாச SMS..! - மகனின் வாழ்க்கையை கெடுத்த தந்தை

Mar 13, 2018 9:07 PM

சென்னையில் மருமகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதோடு, மருமகளின் நடத்தை குறித்து தனது மகனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி விவாகரத்து வரை கொண்டு சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 சென்னை கண்ணகி நகரை சேர்ந்த குமார் என்பவரது மகள் சுரேகா, இவருக்கும் கூடுவாஞ்சேரி கன்னிவாக்கத்தை சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. தீக்ஷா என்ற ஒன்றரை வயது குழந்தையுடன் இரு வருடங்கள் சந்தோஷமாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில் மர்ம நபர் அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் பிரச்சனை தொடங்கியது.

கடந்தாண்டு சுரேகாவின் செல்போனிற்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தது. சில நாட்களில் சுரேகாவின் கணவர் தீபக் செல்போனிற்கும், மாமனார் கபாலீஸ்வரன் செல்போனிற்கும் வந்த குறுஞ்செய்திகளில் சுரேகாவின் நடத்தை சரி இல்லை என்றும், அவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருக்கும் ஆதாரங்கள் இருப்பதாவும் அந்த மர்ம நபர் குறிப்பிட்டுள்ளான். இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய நபர் யார் என கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு தீபக் தனது மனைவி நடத்தையில் சந்தேகமடைந்து சண்டையிட தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் மனைவி மீதான சந்தேகத்தில் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய தீபக், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்து வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் தனது தந்தை வீட்டில் இருந்த சுரேகாவிற்கு மீண்டும் ஆபாச குறுஞ்செய்திகள் வர தொடங்கியுள்ளது, இதனால் சுரேகா கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரித்ததில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது சுரேகாவின் மாமனார் கபாலீஸ்வரன் என்பது தெரிந்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய மற்றொரு சிம்கார்டும் இருந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மகனுக்கு திருமணம் ஆன புதிதில் தனது மருமகள் மீது மோகம் கொண்ட கபாலீஸ்வரன் அவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வலை வீசியுள்ளார்.

ஆனால் சுரேகா அவற்றை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டு விட, அவரை பழி வாங்க திட்டமிட்டு மகனிடம் இருந்து பிரிக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் கைதான கபாலீஸ்வரன். அஜித்குமார் நடித்த ஆசை படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை போன்று குடும்பத்தினரிடம் நல்லவர் போல நடித்து கொண்டு தனது சொந்த மகனின் வாழ்க்கையிலேயே விளையாடிய கபாலீஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.