​​ நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

Published : Sep 06, 2018 7:42 AM

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

Sep 06, 2018 7:42 AM

வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், மன்னன், அமைதிப்படை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளவர் வெள்ளை சுப்பையா. கோவை மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சொந்த ஊராகக் கொண்ட வெள்ளை சுப்பையா, ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான நாடகங்களில் நடித்திருக்கிறார். நாடகங்கள் தந்த அனுபவம் மெல்ல மெல்ல அவரை சினிமா உலகுக்கு அழைத்து வந்தது.

முதல் படமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெள்ளி விழா கண்ட பாசமலர் திரைப்படமாக அமைந்தது. அதன் பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை கதா பாத்திரங்களில் துணை நடிகராக வெள்ளை சுப்பையா நடித்திருக்கிறார்.


நேசம் புதுசு திரைப்படத்தில் பஞ்சாயத்துத் தலைவரை வெறுப்பேற்றி வடிவேலு துரத்தும் காட்சியில், அவரைப் பார்த்து ‘திரும்பத் திரும்பப் பேசுற நீ’ ‘திரும்பத் திரும்பப் பேசுற நீ’ என்று சொல்லிக் கொண்டே வெள்ளை சுப்பையா விழும் காட்சி ரசிகர்களால் பரவலாக ரசிக்கப்பட்டது.

கால ஓட்டத்தில் சரியான சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த வெள்ளை சுப்பையாவுக்கு புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டு அது பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதற்கான சிகிச்சைக்காக போதிய பணம் இல்லாமல் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வெள்ளை சுப்பையா உதவி கேட்ட வரலாறும் உண்டு.

பட வாய்ப்புகள் இன்றி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அவரது மகள் வீட்டில் தங்கியிருந்த வெள்ளை சுப்பையா வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு காலமானார்.