​​ தமிழக அரசின் முட்டை டெண்டர் நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி வரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசின் முட்டை டெண்டர் நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி வரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published : Sep 05, 2018 5:02 PM

தமிழக அரசின் முட்டை டெண்டர் நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி வரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 05, 2018 5:02 PM

தமிழக அரசின் முட்டை டெண்டர் நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி வரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-2018 ஆண்டுக்கு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்குபெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியும், டெண்டருக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளை அனுமதிக்க கோரியும் கரூரை சேர்ந்த வாசுகி கோழி பண்ணை உள்ளிட்ட 4 பண்ணைகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கொள்முதல் விவகாரத்தில் அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள உரிமை உள்ளதாகவும், குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக செயல்பட அரசாணை பிறப்பிக்கப்படவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆரோக்கியமான போட்டிக்காவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், இடைத்தரகர்களை தவிர்க்கவே நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக அரசு தரப்பு விளக்கமளித்தது.

இதனையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 20ம் தேதி வரை அவகாசம் வழங்குவதாகவும், அதுவரை டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவைக்குமாறும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினத்துக்கே வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தார்.