​​ முதுநிலை பொறியியல் - 77 சதவீத காலியிடங்கள்... காரணம் என்ன ?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதுநிலை பொறியியல் - 77 சதவீத காலியிடங்கள்... காரணம் என்ன ?


முதுநிலை பொறியியல் - 77 சதவீத காலியிடங்கள்... காரணம் என்ன ?

Sep 05, 2018 2:43 AM

தமிழகத்தில் பொறியியல் இளநிலை பட்டப்படிப்புகளை போலவே முதுநிலை பட்டப்படிப்புகளிலும் காலி இடங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 77 சதவிகித இடங்கள் காலியாக உள்ளன. உயர்கல்வி கற்க ஆளில்லாத நிலை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி...

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு, பொறியியல் பட்டப்படிப்புகளை  படிக்க விருப்பமில்லாத நிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இளநிலை படிப்புகளில் ஏறத்தாழ 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ளதோடு சுமார் 200 கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. இந்நிலையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்புகளை படிக்கவும் ஆளில்லாத நிலை உருவாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 332 பொறியியல் கல்லூரிகளில் 16 ஆயிரத்து 728 எம்.இ., எம்.டெக்.,  படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவற்றில் சேருவதற்காக  நடத்தப்பட்ட கேட் மற்றும் டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வுக்கு 6 ஆயிரத்து 736 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில்,அனைவரும் அழைக்கப்பட்டனர். ஆனால், 3 ஆயிரத்து 891 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று பாடப்பிரிவுகளையும், கல்லூரிகளையும் தேர்வு செய்தனர்.

இதனால், தற்போது பொறியியல் கல்லூரிகளில் 23 சதவீத முதுநிலை படிப்பு இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாகவும், 77 சதவிகித இடங்கள் அதாவது 12 ஆயிரத்து 837 இடங்கள் காலியாக இருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

முதுநிலை படிப்புகளை படிக்க ஆகும் கூடுதல் செலவு மாணவர்களிடம் தயக்கத்தை உருவாக்கி உள்ளது. செலவழித்து படித்தாலும் உரிய சம்பளத்துடன் கூடிய பணி கிடைக்காத நிலை இருப்பதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

முதுநிலை படித்த மாணவர்கள், பணிக்கு செல்லும் போது, இளநிலை படித்தவர்களுடன் சேர்த்தே பணிக்கு தேர்வாகும் நிலை உள்ளது. இளநிலை படித்தோருக்கான சம்பளமே கிடைக்கும் நிலையில் ஏன்  முதுநிலையில் சேர வேண்டுமென மாணவர்கள் கருதுகிறார்கள்.

இளநிலை பொறியியல் முடித்த பலரும் பணிக்கு சேரும் நிலையில், பலர் எம்.பி.ஏ, மாஸ் கம்யூனிகேஷன் வேறு படிப்புகளை தேர்வு செய்கிறார்கள். இப்படி மாணவர்கள் பட்டமேற்படிப்பில், வேறு படிப்புகளை தேர்வு செய்வதால் எம்.இ., எம்.டெக் படிப்போர் எண்ணிக்கை குறைவதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

பொறியியல் முதுநிலை படிக்க ஆளில்லாத நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பொறியியல் கல்வியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பாடுமென்ற கருத்தும் உள்ளது. எதிர்கால பொறியியல் துறையில் தரமான ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு வரும் என்றும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எம்.இ., எம்.டெக் போன்ற உயர்நிலை படிப்புகளை முடித்தோருக்கு உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே படிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க வழி வகுக்கும். முதுநிலை படிப்புகளை பகுதி நேரமாக படிக்க கூடுதல் இடம் ஒதுக்கினால் படிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் முதுநிலை படிப்போருக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கினாலோ, அல்லது கல்வி கட்டணங்களை குறைத்தோலோ படிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்குமென்பது கல்வியாளர்களின் கருத்தாகும்.