​​ கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எலிக்காய்ச்சல்? வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை வேண்டுகோள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எலிக்காய்ச்சல்? வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை வேண்டுகோள்


கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எலிக்காய்ச்சல்? வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை வேண்டுகோள்

Sep 05, 2018 1:51 AM

கேரளாவிலிருந்து எலிக்காய்ச்சல் தமிழ்நாட்டிற்கு பரவவில்லை என்றும், அதுகுறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு... 

கேரளாவில் பெருமழை வெள்ளத்தின்போது, மனித உயிர்கள் மட்டுமின்றி, ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், எலி, பெருச்சாளி உள்ளிட்டவையும் உயிரிழந்தன... இவற்றிலிருந்து வெளியேறிய சிறுநீர், இரத்தம் ஆகியவை தண்ணீரில் கலந்ததால், கேரளாவில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து, கேரள மாநிலம் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில், எலிக்காய்ச்சல் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளில், தமிழ்நாடு அரசின், பூச்சியியல் வல்லுநர்கள் குழு உள்ளிட்ட பொது சுகாதாரத்துறையின் 18 குழுக்கள் தங்களை ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் எலிக்காய்ச்சல் பரவுவதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதால்,  பொதுமக்களிடம் ஒருவித ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, தமிழ்நாட்டின், எந்த பகுதியிலும், குறிப்பாக கேரள மாநில எல்லையோர பகுதிகளிலும், எலிக்காய்ச்சல் ஏற்படவில்லை என்றார். எனவே, தேவையற்ற வதந்திகளை ஒருபோதும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுகொண்டார். 

ஸ்பைரோகீட்((Spirochete)) எனும் பாக்டீரியா வகை கிருமியால் ஏற்படும் எலிக்காய்ச்சலை, லெப்டோஸபைரோசிஸ் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. மழை-வெள்ள காலங்களின்போது நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர், மாசு கலந்த தண்ணீரில் கலக்கும்போது, எலிக்காய்ச்சல் பரவுகிறது.

எலிகள், பெருச்சாளிகள், பன்றிகள், நாய்கள், ஆடுகள், மாடுகள் ஆகியவை காயமடைந்து உடல்நலிவுறும்போதும், இறக்கும்போதும் அவற்றிலிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம் எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. எலிக்காய்ச்சலுக்கான நோய் தொற்று ஒருவரது உடலில் பரவத் தொடங்கினால், முதலில், கண்கள் சிவக்கும், பின்னர், தலைவலி, குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்...

பின்னர் படிப்படியாக தசைவலி, உடல்வலி ஏற்படுவதுடன், வாந்தி, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு உருவாகும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற்று முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். குடிநீரில் குளோரின் கலந்து பயன்படுத்துவதன் மூலமும், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை அருந்துவதன் மூலமும், எலிக்காய்ச்சல் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்..