​​ ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கங்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கங்கள்

Sep 02, 2018 11:42 AM

ஆசிய விளையாட்டு போட்டிகளில்  இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதனால் பதக்க வேட்டையில் முந்தைய சாதனைகள் உடைத்து புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. 

இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 14வது நாளிலும் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்தது.
ஆடவருக்கான குத்துச் சண்டை போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல், இறுதிச்சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் துஸ்மதோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இதன்மூலம் குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 75 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேபோல சீட்டு விளையாட்டிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பர்தான் பிரணாப்-சர்க்கார் ஷிப்நாத் ஜோடி இறுதிச்சுற்றில் 384 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது.

மகளிருக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணியினர் ஹாங்காங் அணியிடம் வெற்றியை பறி கொடுத்தனர். இதனால் இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இதன் மூலம் இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக இந்திய அணி 69 பதக்கங்களை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி 65 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்த நிலையில் நடப்பு போட்டியில் 69 பதக்கங்களை வென்று இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

தங்கப்பதக்கம் -- 15
வெள்ளி -- 24
வெண்கலம் -- 30
மொத்தம் -- 69