​​ தனியார் பேருந்துகள் மோதி விபத்து... குடும்பத்தை இழந்து தவிக்கும் குழந்தை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பேருந்துகள் மோதி விபத்து... குடும்பத்தை இழந்து தவிக்கும் குழந்தை

தனியார் பேருந்துகள் மோதி விபத்து... குடும்பத்தை இழந்து தவிக்கும் குழந்தை

Sep 01, 2018 11:09 PM

சேலம் அருகே தனியார் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். சரக்கு ஆட்டோ ஓட்டுநரின் அலட்சியத்தால்  இந்த விபத்தில் குடும்பத்தையே பறி கொடுத்த குழந்தை ஒன்று தவித்து வருகிறது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரவிந்த் என்ற தனியார் பேருந்து தருமபுரி நோக்கி புறப்பட்டது.  பேருந்து மாமாங்கம் என்ற இடத்தில், வந்த போது,அங்கு பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலைத் தடுப்பை தாண்டி, எதிர்புறத்தில் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற யாத்ரா டிராவல்ஸ் நிறுவன ஆம்னி பேருந்து மீதும் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 2 பேருந்துகளிலும் இருந்த 7பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 38 பயணிகள் காயமடைந்தனர்.  

சம்பவ இடத்தில் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியாத நிலையில், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்று அடையாளம் காட்ட முயற்சிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், 3 வயதான எட்டன் என்ற அந்த குழந்தையுடன் வந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகிய 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து சேலம் வந்த அவர்களது உறவினர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. 

விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், அந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவின் ஓட்டுநர் அதிக பாரம் ஏற்றியதால் , பின்பக்க கதவை அடைக்க முடியாமல் பாதியாக திறந்த நிலையில்,சரக்கோடு சேர்த்து கட்டியுள்ளார். இதனால், பின்புற கதவில் இருந்த பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் தெரியாததாலும், பஞ்சர் ஆகி சாலையில் நிற்பதை உணர்த்தும் வகையில், கூம்பு வடிவ பிரதிபலிப்பான், இண்டிகேட்டர் போடாததாலும் தனியார் பேருந்து அந்த ஆட்டோ மீது மோதியதாகக் கூறப்படுகிறது. சரக்கு ஆட்டோ ஓட்டுநரின் அலட்சியத்தால் ஒரு குடும்பத்தையே விபத்தில் இழந்து குழந்தை பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தாலும் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விபத்துக்குக் காரணமான ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜ்குமார் மற்றும் கனகராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனை முதல்வர் இராஜேந்திரன், கண்காணிப்பாளர் தனபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.