​​ குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு பெண் பலி - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு பெண் பலி - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு


குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு பெண் பலி - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Mar 13, 2018 1:11 PM

தேனி மாவட்டம் கொழுக்குமலை வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். 

குரங்கணி அருகே கொழுக்குமலை வனப்பகுதிக்கு டிரக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதில் காயமடைந்த 15 பேரில் 12 பேர், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை, அப்போலோ, மீனாட்சி மிஷன், கிரேஸ் கென்னட் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 3 பேர் கோவை, ஈரோடு, சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சென்னையைச் சேர்ந்த அனுவித்யா, ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியைச் சேர்ந்த கண்ணன், சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே மருத்துவமனையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி, திருப்பூர் மாவட்டம் உடுமலைச் சேர்ந்த சிவசங்கரி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோல், கிரேஸ் கென்னட் மருத்துவமனையில் திருப்பூர் மாவட்டம் தேக்கம்பாளையத்தைச் சேர்ந்த சக்திகலா, பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த திவ்யா விஸ்வநாதன், ஈரோடு மாவட்டம் சித்தோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையைச் சேர்ந்த சுவேதா மற்றும் பார்கவி ஆகியோர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும், நிவ்யா ரிக்ருதியும், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மீனுவும் மதுரை அப்போலோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கோவை கங்கா மருத்துவமனையில் சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீயும், ஈரோடு எல்.கே.எம். மருத்துவமனையில் சபிதாவும், சென்னை அப்போலோ மருத்துவமனையில் இலக்கியாவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா பலனின்றி இன்று உயிர் இழந்தார். இதனால் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.