​​ குடகனாற்றுப் படுகைகளில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடகனாற்றுப் படுகைகளில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளை

Published : Aug 31, 2018 8:16 PM

குடகனாற்றுப் படுகைகளில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளை

Aug 31, 2018 8:16 PM

திண்டுக்கல்லின் முக்கிய குடிநீர் ஆதாரமான குடகனாற்றில் பட்டப்பகலில் சல்லடை வைத்து சலித்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. பலமுறை புகாரளித்தும் கனிமவளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகி ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் வந்து அங்கிருந்து 109 கிலோ மீட்டர்கள் பயணித்து கடலில் கலக்கும் குடகனாறு, திண்டுக்கல் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அத்துடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களையும் செழுமைப்படுத்தி வருகிறது குடகனாறு. மழைப்பொழிவு குறைந்ததால் வறண்டு காணப்படும் குடகனாற்றில் இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

ஆற்றில் மணல் அள்ளும் கொள்ளையர்கள் எவ்வித உறுத்தலோ, பயமோ இன்றி அங்கேயே சல்லடை வைத்து சலித்து டிராக்டரில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஏற்கனவே ஆற்றின் கரைப்பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நாள்தோறும் சுரண்டப்படும் மணல் காரணமாக நீராதாரம் முற்றாக பாதிப்புக்கு உள்ளாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுப்பணித்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகக் கூறும் அவர்கள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.