​​ அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கின் விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கின் விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கின் விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்

Aug 31, 2018 12:34 PM

அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜரான இரண்டு உதவிப்பேராசிரியர்களிடமும், லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டில் நடைபெற்ற அண்ணாபல்கலைக் கழகத் தேர்வின் போது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில் 240 கோடி அளவுக்கு மாணவர்களிடம் லஞ்சம் வாங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அண்ணாபல்கலைக் கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உள்ளிட்ட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திண்டிவனத்தில் உள்ள அண்ணாபல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்ற போது, அதற்கு பொறுப்பு வகித்த உதவிப் பேராசிரியர்கள் சிவக்குமார், விஜயகுமார் இருவரும் நேரில் ஆஜராகுமாறு இந்த வழக்கை விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் சிவக்குமார், விஜயகுமார் இருவரும் காலை 10.30 மணி அளவில் ஆஜராகினர்.

இவர்கள் இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் புஷ்பலதா பல மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த முறைகேடு குறித்து 50 மாணவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 2017 ம் ஆண்டு தேர்வின் போது நடைபெற்றதைப் போல, மற்ற ஆண்டுகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைகேட்டில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.