​​ நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் இடையறாது உழைத்தவர் கலைஞர் கருணாநிதி - கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் இடையறாது உழைத்தவர் கலைஞர் கருணாநிதி - கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் இடையறாது உழைத்தவர் கலைஞர் கருணாநிதி - கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

Aug 31, 2018 2:09 AM

கலைஞர் கருணாநிதி நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் இடையறாது உழைத்தவர் என்று சென்னையில் நடைபெற்ற புகழ் வணக்கம் செலுத்தும் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

திமுக சார்பில் அந்த கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு புகழ் வணக்கம் செல்லும் கூட்டங்கள் பல்வேறு ஊர்களில் நடைபெற்றன. இந்த வரிசையில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில்
முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் இன்னல் ஏற்படும் போதெல்லாம் அதை காத்தவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்.

நெருக்கடி நிலை காலத்தில் திமுக அதனை எதிர்த்து நின்றதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமது பேச்சில் நினைவு கூர்ந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், கருணாநிதி மிகச்சிறந்த நட்பை பேணியதை அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத கலைஞரின் மறைவின் போது, இரு அவைகளையும் ஒத்தி வைத்து மத்திய அரசு சிறப்பு மரியாதை செய்ததாக நிதின் கட்கரி தெரிவித்தார்.

50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்தது கலைஞரின் சாதனைகளில் ஒன்று என பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் கூறினார். மத்திய அரசு தற்போது முன்னெடுத்துள்ள மின் மயக்கமாக்கலை 1970-ம் ஆண்டிலேயே கலைஞர் நடைமுறைப்படுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரான டெரிக் ஓ பிரையன், வங்கத்தில் எழுதி வைத்து தமிழில் பேசினார். அப்போது அவர்,
மத்திய அரசின் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து போராடியவர் கலைஞர் என்றார். கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் கட்சிகள் அனைத்தும் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தலைமை பண்புக்கு உரியவராக கலைஞர் திகழ்ந்தார் என்று காங்கிரஸ் கட்சி முன்னணித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார். கலைஞர் 5 முறை முதலமைச்சராக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் எளிமையை கைவிடாமல் கலைஞர் வாழ்ந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

இதே போன்று கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் பிரபுல் பட்டேல், முன்னாள் அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, முன்னாள் அமைச்சர் சவுத்ரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.