​​ சென்னை அண்ணா பல்கலை.யில் இரவு நேரமாகியும் ஏராளமான மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அண்ணா பல்கலை.யில் இரவு நேரமாகியும் ஏராளமான மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை

சென்னை அண்ணா பல்கலை.யில் இரவு நேரமாகியும் ஏராளமான மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை

Aug 28, 2018 2:02 AM

சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வின் இறுதி நாளான திங்களன்று இரவு நீண்ட நேரமாகியும் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர்.

தமிழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, துணை கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது. இந்த துணை கலந்தாய்வு, திங்களன்று இரவு 8 மணிக்குள் நிறைவு பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிற்பகல் 3 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய மாணவர்களே, இரவு 7 மணிக்குத்தான் வந்து சேர்ந்தனர். இதனால் திட்டமிட்டபடி துணை கலந்தாய்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சில தனியார் பொறியியல் கல்லூரிகள், ஞாயிற்றுக்கிழமையன்றே கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய மாணவர்களை திங்கள்கிழமை மாலை மொத்தமாக தங்கள் கல்லூரி பேருந்துகளில் அழைத்து வந்துள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு 55 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு இவ்வாறு அவர்கள் அழைத்து வந்துள்ளனர். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே திட்டமிட்டு அறிவித்திருந்தபடி மாணவர்கள் வராததோடு, துணை கலந்தாய்வு நேரம் முடிந்த பின்னரும் நீண்டு வருகிறது.

தற்போது வந்துள்ள மாணவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை திருப்பி அனுப்பிவிட்டு, செவ்வாயன்று கலந்தாய்வு செய்ய முடியாத சூழலும் நிலவுகிறது. அவர்களுக்கு குடிநீர், உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை உடனடியாக செய்து தர முடியாது என்பதால், கலந்தாய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. சில தனியார் கல்லூரிகளின் பேராசையால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் தவித்து வருகின்றனர்.