​​ வெள்ள நிவாரண முகாம்களில் 4.5 லட்சம் பேர் - ஒரு மாத ஊதியத்தை வழங்க பினராயி விஜயன் கோரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ள நிவாரண முகாம்களில் 4.5 லட்சம் பேர் - ஒரு மாத ஊதியத்தை வழங்க பினராயி விஜயன் கோரிக்கை

வெள்ள நிவாரண முகாம்களில் 4.5 லட்சம் பேர் - ஒரு மாத ஊதியத்தை வழங்க பினராயி விஜயன் கோரிக்கை

Aug 27, 2018 11:14 AM

கேரளாவை புரட்டிப் போட்ட கனமழை வெள்ளம் ஓய்ந்த பின்னரும், நிவாரண முகாம்களில் நான்கரை லட்சம் பேர் இன்னும் தங்கி உள்ளனர்.. 

கேரளாவில் 8 நாட்களாக பெய்த கனமழை கடந்த 17ஆம் தேதி வரை நீடித்தது. கேரளாவில் உள்ள 35க்கும் மேற்பட்ட சிறிய பெரிய அணைகள் அனைத்தும் நிரம்பி, உபரி நீர் பெருக்கெடுத்ததால், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட  மாவட்டங்கள் பெருவெள்ளத்தில் மூழ்கின... இதுவரை 302 பேர் உயிரிழந்திருப்பதாக கேரளா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

பெருமழை-வெள்ளத்தின்போது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 10 லட்சம் பேரில், ஐந்தரை லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள நான்கரை லட்சம் பேர் ஆயிரத்து 435 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், குறிப்பிட்ட சொல்ல முடியாத அளவிற்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும், பாலங்கள், சாலைகள் கட்டமைப்பு வசதிகளை மீண்டும் மேம்படுத்தித் தர ஏராளமான நிதி தேவைப்படுவதாக கூறினார். கேரள மக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிக்குமாறு கேட்டுக் கொண்ட பினரயி விஜயன் மாதத்தின் 3 நாட்கள் ஊதியத்தை மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக அளிக்கலாம் என்றும்கேட்டுக்கொண்டிருக்கிறார்.