​​ விஷப்பாட்டிலுடன் போராடிய பெண்..! ஸ்ரீராம் பைனான்ஸ் மீது புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஷப்பாட்டிலுடன் போராடிய பெண்..! ஸ்ரீராம் பைனான்ஸ் மீது புகார்


விஷப்பாட்டிலுடன் போராடிய பெண்..! ஸ்ரீராம் பைனான்ஸ் மீது புகார்

Aug 24, 2018 12:10 PM

நாகர்கோவிலில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற  நான்கரை லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பி செலுத்திய பின்னரும் வாகனத்தை விற்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்ததால் விரக்தி அடைந்த பெண் ஒருவர் விஷபாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்ரீராம் வாகன பைனான்ஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வருகின்றது.
இந்த நிறுவனத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெயா என்பவர் கடன் பெற்று கார் ஒன்றை வாங்கினார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த காரை வடசேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கிடைத்த பணத்தில் கடந்த மாதம் 13 ஆம்தேதி ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்ற தொகைக்கு வட்டியுடன் சேர்த்து அசல் தொகையான நான்கு லட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரம் ரூபாயையும் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகின்றது.

image

இதனை பெற்றுக் கொண்ட ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் ஒருவாரம் கழித்து ஆட்சேபனை இல்லாசான்றிதழ்(NOC) தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஒருவாரம் கழித்து வந்த ஜெயாவிடம் அவரது உறவினர் பெற்ற கடன் திருப்பி செலுத்தப்படவில்லை என கூறிய ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம், உறவினர் பெற்றுள்ள கடன் பணத்தை செலுத்தும் வரை தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என மறுத்து இழுத்தடித்துள்ளனர்.

தடையில்லா சான்றிதழ் வழங்கினால் மட்டுமே வாகனத்தை வாங்கியவர் அதனை இயக்க முடியும் இல்லையெனில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் அந்த வாகனத்தை எந்த நேரமும் யாரை வைத்து வேண்டுமானாலும் பறிமுதல் செய்து கொள்ளும் என்பதால் கடந்த சில தினங்களாக தடையில்லா சான்றிதழ் பெறமுயற்சி மேற்கொண்டும் பலனில்லை என்று அவருடன் வந்தவர்கள் ஸ்ரீராம் நிறுவனத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

ஒரு பக்கம் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் தடையில்லா சான்று கொடுக்க மறுத்து அலைக்கழிக்க மறுபுறம் முழு பணம் கொடுத்து காரை விலைக்கு வாங்கிய மணிகண்டனும் சான்றிதழ் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியின்றி தனியார் நிறுவனம் வந்த ஜெயா அங்கு விஷம் அருந்தி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு இருந்தவர்கள் ஜெயாவை தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உறவினர் வாங்கிய கடனுக்கும் ஜெயாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் புகாரை பெற்று ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.