​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிபிஎஸ்இ கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Published : Aug 21, 2018 12:56 AM

சிபிஎஸ்இ கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Aug 21, 2018 12:56 AM

நடிகர்கள் குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு நாட்டிலே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கக்கூடிய சிபிஎஸ்இ யின் தரம் குறைந்துவிட்டதா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வகுத்த பாட புத்தகங்கள் தவிர, தனியார் பாட புத்தகங்களை பயன்படுத்துவதாகக் கூறி, வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது என கூறி அந்த சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை 15% வரை குறைப்பது தொடர்பான ஒரு மாதிரி திட்டத்தை வகுத்து இருப்பதைப் போல தமிழகத்தில் ஏன் பின்பற்றக் கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இது சம்பந்தமாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ சுற்றறிக்கையும், உயர் நீதிமன்ற உத்தரவும் அமல்படுத்தப்படவில்லை அதிருப்தி தெரிவித்த நீதிபதி, 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மூன்று வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் இது தொடர்பான விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

விசாரணையின் போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் இரண்டாம் வகுப்பு பொது அறிவு பாடப் புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் பற்றி கேள்வி இடம்பெற்றுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். அதற்கு, நாட்டிலே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கக்கூடிய சிபிஎஸ்இ யின் தரம் எங்கே? என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் விதிகளை முறையாக சிபிஎஸ்இ பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் விசாரணையை செவ்வாய்கிழமைக்கு தள்ளிவைத்தார்.