​​ சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழுக் கூட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழுக் கூட்டம்


சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழுக் கூட்டம்

Aug 19, 2018 9:39 PM

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் கோரிய நிர்வாகிகளின் தீர்மானத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக் குழு பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். 2017-2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்கு வாசிக்கப்பட்டு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் இன்னும் 6 அல்லது 7 மாதங்களுக்குள் முடியும் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு தேர்தல் நடத்தாமல் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரிய தீர்மானத்துக்கு பொதுக் குழு உறுப்பினர்கள் கரவொலி மூலம் ஒப்புதல் வழங்கினர். 

image

கால நீட்டிப்புக்கான காரணத்தை நிர்வாகி பொன் வண்ணன் விளக்கி பேசிக் கொண்டிருந்த போது, வேறு நிர்வாகம் மாறாது என அரங்கில் இருந்த சிலர் குரல் எழுப்பினர்.

கட்டிட நிதிக்காக அடுத்தடுத்து இரண்டு கலைநிகழ்சிகள் நடத்தப்படும் என பொருளாளர் கார்த்தி பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்தார். தங்களது பதவிக்காலம் முடிந்த பிறகு அடுத்த தேர்தல் நடத்தும் வரை தற்போதைய கட்டிட கமிட்டி மற்றும் நிர்வாகிகளே தொடர வேண்டும் என்று கார்த்தி கோரிய தீர்மானத்துக்கும் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது.

முன்னதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.சேகர் நீதிமன்றத்திற்கு சென்று தமது நீக்கத்தை ரத்து செய்த உத்தரவு நகலோடு பொதுக்குழு வந்ததால், பழைய நிர்வாகம் போல் அன்றி அவரை வரவேற்பதாக விஷால் தெரிவித்தார். 

நடிகர் சங்க  பொதுக்குழுவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்வி சேகர், கட்டுமானப் பணி முடியும் வரை தேர்தலை நடத்தாமல் தள்ளி வைப்பதை தான் ஏற்க மாட்டேன் என்றார். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்றும், வரும் நடிகர் சங்க தேர்தலில் தமது தலைமையிலேயே ஒரு அணி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.