​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 கிலோ தங்கம் 5 கிலோ வெள்ளி மீட்பு..! வாக்கி டாக்கி கொள்ளையன் கைது

Published : Aug 18, 2018 2:46 AM

3 கிலோ தங்கம் 5 கிலோ வெள்ளி மீட்பு..! வாக்கி டாக்கி கொள்ளையன் கைது

Aug 18, 2018 2:46 AM

சென்னை அண்ணா நகரில் 21 பங்களா வீடுகளில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் தினகரனை 3 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். கையில் வாக்கி டாக்கியுடன் 4 மாநில போலீசுக்கு தண்ணி காட்டிய கொள்ளை கும்பலின் பின்னணி....

இவர் தான் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா காவல்துறையினருக்கு சவால் விட்டு வந்த கில்லாடி கொள்ளையன் தினகரன்..!

ஹோண்டா சிட்டி காரில் வலம் வருவது..! பெரிய கட்டிடங்களில் கயிறு போட்டு ஏறி கொள்ளையடிப்பது..! பூட்டிய வீடுகளில் ஆட்கள் இருக்கிறார்களா ? என்பதை அறிய துண்டு பேப்பர் வைத்து சோதிப்பது..! கடப்பாறையை கொண்டு பூட்டுகளையும், கதவுகளையும் உடைத்து கைவரிசை காட்டுவது..! செல்போனில் பேசினால் போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள் என்று கூட்டாளிகளுடன் பேசுவதற்கு வாக்கி டாக்கி பயன்படுத்துவது என்று தினகரனின் கொள்ளை டெக்னில் அனைத்தும் புது ரகம் என்கின்றனர் காவல்துறையினர்..!

சென்னை அண்ணா நகரில் கடந்த சில மாதங்களாக தொழில் அதிபர்களின் பங்களா வீடுகளில் புகுந்து கிலோ கணக்கில் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்ற தினகரனை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

சென்னையில் கைவரிசை காட்டிவிட்டு கேராளவில் பதுங்குவது அங்குள்ள வீடுகளில் களவாடிவிட்டு ஆந்திராவுக்கு இடம் மாறுவது, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் தாடி வளர்த்துக் கொண்டு தெலுங்கானாவில் வலம் வருவது என 21 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள தினகரன் கிலோ கணக்கில் தங்க நகைகளையும் மற்றும் வெள்ளி பொருட்களையும், லட்சகணக்கில் ரொக்கப்பணத்தையும் அள்ளிச்சென்றதாக குற்றஞ்சாட்டுகின்றது காவல்துறை.

இந்த நிலையில் அவனது நடமாட்டம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருப்பதாகவும், நாகை மாவட்டத்தில் பதுங்கி திருடிய நகைகளை விற்று வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

நாகைமாவட்டத்தை சேர்ந்த லோகனாதன், காளிதாஸ் ஆகியோர் உதவியுடன் அடகுகடைகளிலும், சில தனி நபர்களிடமும் நகை விற்று பணமாக்கி வந்த நிலையில் தனிப்படை காவல்துறையினர் தினகரனை சுற்றிவளைத்தனர். அவனுக்கு உதவிய லோகனாதன், காளிதாஸ் ஆகியோரும் பிடிபட்டனர். 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் சென்னை அழைத்து வந்தனர்.

கொள்ளையன் தினகரன் கொடுத்த தகவலின் பேரில் 3கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, 1000 அமெரிக்க டாலர்கள், 3 வாக்கி டாக்கிகள் , ஹோண்டா சிட்டி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கொள்ளையன் தினகரனின் கூட்டாளியான திருவாரூர் முருகன் என்பவனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ஏற்கனவே இவர்களின் கூட்டாளிகளான ரகு,கோபால், கார்த்தி, காரைக்குடி மணிகண்டன் ஆகியோரை சில மாதங்களுக்கு முன்பு கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 1 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி மற்றும் பணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினருக்கு சவால் விடுத்து வந்த கொள்ளையன் தினகரனை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கொள்ளையர்கள் போலீசிடம் சிக்காமல் தப்பிக்க புது புது வழிகளை கையாண்டாலும் காவல்துறையினரிடம் சிக்கி கொள்வார்கள் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்..!