​​ மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

Aug 13, 2018 3:32 PM

இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி, கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 89. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1968ஆம் ஆண்டு இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971ஆம் ஆண்டில் இருந்து10 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்றபோது, 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை மக்களவை சபாநாயகராக பொறுப்பு வகித்தார்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டபோது, சபாநாயகர் பதவியில் இருந்து விலகி, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக சோம்நாத் சாட்டர்ஜி வாக்களிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. ஆனால் சபாநாயகர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எனக் கூறி, சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவர் 2008ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்த சோம்நாத் சாட்டர்ஜி, சிறுநீரகக் கோளாறு காரணமாக, கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை லேசான மாரடைப்பு ஏற்பட்டதால், சுவாச உதவிக் கருவி பொருத்தி தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையிலேயே சோம்நாத் சாட்டர்ஜியின் உயிர் பிரிந்தது. 89 வயதில் காலமான அந்த முதுபெரும் தலைவருக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலில் நம்பகத்தன்மையும், உறுதியும் மிக்க தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்ற ஜனநாயகத்தை செழிப்புறச் செய்தவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏழைகளுக்கும் நலிந்த பிரிவினருக்கும் ஓங்கிக் குரல் கொடுத்த அவரது இறப்பால் மிகுந்த வேதனை அடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகராகவும் 10 முறை மக்களவை உறுப்பினராகவும், இருந்த சோம்நாத் சாட்டர்ஜி கட்சி வேறுபாடுகளைக் கடந்து மதித்துப் போற்றப்பட்டவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.