​​ ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..! காவிரி கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..! காவிரி கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published : Aug 10, 2018 9:47 PM

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..! காவிரி கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Aug 10, 2018 9:47 PM

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 63 ஆயிரம் கனஅடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வருகிறது.

 

ஒகேனக்கல்லுக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அருவிகளில் குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 ஆயிரத்து 311 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும்பட்சத்தில், இதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

 

இதனிடையே, மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் தமிழக அரசுக்கும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி உள்ளார். அதில் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்பாக அணைக்கு கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலமும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

 

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பட உள்ளதால் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டணம், சேலம் கேம்ப், தொட்டில்பட்டி, எடப்பாடி, சங்ககிரி தாலுகா பகுதிகளில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஆறுகளில் குளிப்பதையும், கரையோரங்களில் நின்று செல்ஃபி உள்ளிட்ட புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் கரையோர பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் பள்ளிப்பாளையத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.